John Bunyan Missionary Story in Tamil

 ஜான் பனியன்


        ஜான் பனியன் இங்கிலாந்திலுள்ள பெட்போர்டு  என்ற இடத்தில் 1628-ம் ஆண்டு பிறந்தார். சிறுவயதில் தனது மூதாதையர்களின் தொழிலான பாத்திரங்களைப் பழுதுபார்த்து விற்பனை செய்யும் தொழிலை தந்தையுடன் சேர்ந்து செய்து வந்தார். 

ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் உயர்கல்வி பெற இவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. தனது இளம்பிராயத்தில் ஒரு கெட்ட மனிதனாகவே வளர்ந்தார். தனது 16-ம் வயதில் 1644-ம் ஆண்டு நடந்த  உள்நாட்டுப்போரின்  கால கட்டத்தில் இராணுவ வீரனாக சேர்ந்தார். 

ஒருமுறை இவர் எல்லையில் நடைபெறும் போருக்குச் செல்ல நியமிக்கப்பட்டார். அதற்கு அவர் ஆயத்தமாகி வரும் நிலையில், கடைசி நேரத்தில் இவருக்குப் பதிலாக வேறொரு நபர் அனுப்பப்பட்டார். அந்நபர் போரின் முதல் நாள் யுத்தத்திலேயே மரணமடைந்தார். இந்த நிகழ்ச்சி ஜான் பனியனை அதிகமாகச் சிந்திக்க வைத்தது. 

இரண்டாண்டுகள் மட்டும் ராணுவத்தில் பணியாற்றி திரும்பிய இவர் தனது 19-வது வயதில் ஒரு விசுவாசியான கிறிஸ்தவப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அவள் அடிக்கடி கிறிஸ்துவைப் பற்றி ஜான் பனியனிடம் பேசுவாள். 

இந்நிலையில் ஒருநாள் தெருவில், "பாத்திரங்கள் பழுதுபார்க்கப்படும்' என்று கூவிக்கொண்டே சென்றபோது வழியில் மூன்று பெண்கள் இயேசு கிறிஸ்துவைப்பற்றி சொல்லிக்கொண்டிருப்பதை நின்று கவனிக்க ஆரம்பித்தார். அவர்கள் மூலம் சுவிசேஷத்தைக் கேட்ட ஜான், வீட்டில் சென்று வேதத்தை அதிகமாக வாசிக்க ஆரம்பித்தார். வேதத்தை வாசிக்க வாசிக்க சமாதானம் கிடைத்ததை உணர்ந்தார். 

மார்ட்டின் லூதரின் வாழ்க்கை சரித்திரப் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தபோது தன்னைக் கிறிஸ்துவுக்கு முற்றிலுமாக ஒப்புக்கொடுத்தா. பாத்திரங்களைப் பழுதுபார்க்கும் வீடுகளில் தனது தொழிலைச் செய்து கொண்டே இயேசுவையும் அறிவிக்க ஆரம்பித்தார். இவரது ஊழியத்தின் மூலம் பலர் ஆண்டவரை ஏற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல், இவரது வியாபாரமும் நன்கு வளர்ந்தது. 

இந்தக்காலத்தில் இங்கிலாந்து தேசத்தில் திறந்தவெளியில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கக்கூடாது என்ற சட்டம் இருந்தது. இதனை அறிந்த ஜான் ""நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்'' (மாற்கு 16:15) என்ற வசனத்தைப் பிடித்துக்கொண்டு சுவிசேஷத்தைப் பிரசங்கித்துவந்தார். 

சில வருடத்திற்குப் பின் இச்சட்டம் கடுமையாகப் பின்பற்றப்பட்டது. ஒருநாள் ஒரு கிராமத்தில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க மக்கள் இவரை அழைத்தாகள். அதனை அறிந்த காவல் துறையினரும் வந்து காத்திருக்க, ஜான் பனியன் தனது பிரசங்கத்தை ஆரம்பித்தவுடனே காவலரால் சிறைப்பிடிக்கப்பட்டு நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டார். நீதிபதி இவரிடம் இனி சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க மாட்டேன் என்று உறுதி கூறினால் உன்னை விடுவிக்கிறேன் என்று கூறினார். அதற்கு ஜான் பனியன் இன்று நான் விடுவிக்கப்பட்டால், தேவ உதவியால் நாளை பிரசங்கிப்பேன் என்றார். 

எனவே அவரது சிறையிருப்பு 3 மாதத்தில் முடியாமல் 12 வருடமாக நீடித்தது. இந்த 12 வருடத்தில் எந்த நேரத்திலும் அவருக்கு விடுதலை கிடைக்கும், ஆனால் ஒரே ஒரு நிபந்தனை, அதாவது நான் இனி பிரசங்கிக்கமாட்டேன் என்ற ஒரே ஒரு உறுதிமொழி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது. 

சிறிய இருண்ட அறையில் 50 பேருடன் இவர் தங்கவேண்டியிருந்தது. இதனால் நோய்கள் வேகமாகப் பரவி, பலர் அதே அறையில் மரித்தனர். தனது குடும்பத்தையும் நான்கு பிள்ளைகளையும் பிரிந்து வெளி உலகத்தையே பார்க்காமல் 12 வருடம் சிறையில் கழித்தது கஷ்டமாக இருந்தாலும், இவர் ஆண்டவரை அதிகம் நேசித்ததால், அதனை சகித்துக்கொண்டார். சிறையில் இவருடன் கொலைகாரர்கள், துஷ்டர்கள் என கிறிஸ்துவை அறியாதவர்கள் இருந்தனர். அவர்களுக்கு சுவிசேஷத்தைச் சொல்லி, அநேகரை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தினார். அங்குதான் அவர் 'மோட்ச பயணம்' என்ற புத்தகத்தை எழுதி முடித்தார். 

தனது 43-வது வயதில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். பின்பு திருச்சபையின் போதகராக 16 வருடம் ஊழியம் செய்தார். சபை போதகராக மட்டுமன்றி பல இடங்களுக்குப் பயணம் செய்து, கல்லூரி மாணவர்கள் மத்தியிலும், தெருக் கூட்டங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். பல நேரங்களில் மிரட்டப்பட்டதோடு, மறுபடியும் சிறைக்கு செல்ல வேண்டியிருந்தது. எனினும் சோர்ந்துபோகாமல் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். 1688-ம் ஆண்டு தனது 59-வது வயதில் மரித்தார். 

ஜான் பனியன் இன்று நம்மிடம் இல்லை என்றாலும் அவர் உருவாக்கின "மோட்சப்பயணம்' என்ற புத்தகம் வேதப் புத்தகத்திற்கு அடுத்தபடியாக 130 க்கும் அதிகமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு இன்றும் அநேகரை கிறிஸ்துவிடம் வழிநடத்திவருகிறது.

Comments