David Brainerd Missionary Story in Tamil

டேவிட் பிரெய்னார்ட் 




        1718 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ம் தேதி "கனக்டிகட்'  என்ற இடத்திலுள்ள "ஹாடம்' என்ற ஊரில் டேவிட் பிரெய்னார்ட் பிறந்தார். டேவிட்டின் சிறு வயதிலேயே தகப்பனாரும் தாயாரும் இறந்து போயினர். எனவே தனது சிறு வயது முதல் சோக மனப்பான்மையுடனும் மரண பயத்துடனும் வாழ்ந்து வந்தார். தீய பழக்கவழக்கங்கள் சந்தோஷத்தை தரும் என்று பிரியத்துடன் அதில் ஈடுபட்டு வாழ்ந்து வந்தார்.

20 வயதான டேவிட் தனது சகோதரியுடன் "டுரம்' என்ற இடத்திலுள்ள பண்ணையில் வேலை பார்த்து தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். அந்நாட்களில் தேவன் அவரை சந்தித்தார்.

1742-ம் ஆண்டு ஆண்டவர் தன்னை மிஷனரியாகச் செவ்விந்தியர்கள் மத்தியில் பணிபுரிய அழைப்பதை டேவிட் உணர்ந்தார். "தேவனே, இதோ அடியேன் இருக்கிறேன் என்னை அனுப்பும். கரடு முரடான, காட்டு மிராண்டிகளிடமும் போக ஆயத்தமாயிருக்கின்றேன். உலகத்தின்   சகல வசதிகளையும் விட்டுப் போகவும், ஏன் மரணத்தினூடேயும் செல்ல ஆயத்தம். உம்முடைய இராஜ்யத்தைக் கட்டுவதற்காக எங்கு வேண்டுமானாலும் போக ஆயத்தமாயிருக்கிறேன்' என்று தன்னை அர்ப்பணித்து ஜெபித்தார்.

இந்தியர்கள் வசிக்கும் "கௌநாமீக்' என்ற இடத்தில் ஊழியத்தை ஆரம்பித்தார். ஊழியப்பாதையில் அவரது வாழ்வு அதிக கடினம் நிறைந்ததாக இருந்தது. 

இவர் எங்கெல்லாம் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தாரோ அங்கெல்லாம் மக்கள் கண்ணீர் விட்டு அழுது மனந்திரும்பினர். சில வெள்ளையர்கள் இப்பைத்தியக்காரன் இந்தியர்கள் மத்தியில் என்ன செய்கிறான் பார்ப்போம் என்று வந்தபோது இவரது செய்தி அவர்களையும் தொட்டது. சிறுவர்களும் இவரது செய்தியினால் தொடப்பட்டனர். 

அக்காலங்களில் அவரது நண்பர்கள் இவரைப் பெரிய சபைகளுக்கு வந்து  போதகாராக பொறுப்பெடுக்க அழைத்தபோது டேவிட் அதை மறுத்து இந்தியருக்காகவே வாழ்வேன் என உறுதிப்படக் கூறினார்.

இவரது ஊழியத்தில் பலனைப்போலவே பாடுகளும் பெருகின. இவர் ஆங்கிலேயருக்கு விரோதமாகச் செயல்பட்டு, இந்தியர் மத்தியில் கலகத்தை ஏற்படுத்துகிறார் என்று கூறி இவரைத் தண்டிக்க அரசாங்க அதிகாரிகள் பிரயாசப்பட்டனர். இருப்பினும் தேவனுடைய வார்த்தைகளை தைரியமாகப் பிரசங்கித்து வந்தார். 

1746-ம் ஆண்டு உடல்நலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டார். காசநோய் முற்றிவிட்டடது என்று அவரைப் பரிசோதித்த  மருத்துவர்கள் கூறினர். திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் 19 வாரங்கள் படுக்கையிலிருந்த அவர் 1749-ம் ஆண்டு தனது 31-ம் வயதில் தேவனுடைய இராஜ்யத்தில் சேர்ந்தார்.

பிரெய்னார்ட்டின் வாழ்வை ஆய்வு செய்தவர், "5 வருடம் மிஷனரி பணி செய்து 70 ஆண்டுகள் ஜீவித்த மனிதர்கள் சாதித்ததைக் காட்டிலும் அவர் அதிகமாகவே சாதித்திருக்கிறார்' எனக் கூறியிருக்கிறார்.

வாழும் நாட்களின் அளவை விட, வாழும் நாட்களின் Quality முக்கியத்துவம் என்பதை நிருபித்த இவரைப் போன்று நாமும் செயல்பட ஜெபிப்போம்.

Comments