William Ault Missionary Story in Tamil

 வில்லியம் ஆல்ட்



        1778 ஆம் ஆண்டு வில்லியம் ஆல்ட் "இங்கிலாந்து" தேசத்தில் ஜாபேஸ் ஆல்ட் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தாயும் தந்தையும் இவரை தெய்வபக்தியுள்ள மகனாக வளர்த்து வந்தனர். வில்லியம் தனது 7 வயதிற்குள் 6 முறை வேதாகமத்தை முழுமையாக படித்துள்ளார். தான் வாழ்ந்து வந்த பகுதியில் ஞாயிறு பள்ளியும் நடத்தி வந்தார். 

1808 ஆம் ஆண்டு இங்கிலாந்து தேசத்திலுள்ள "மெத்தடிஸ்ட்" திருச்சபையின் போதகராகி, ஆண்டவரின் ஊழியத்தை செய்து வந்தார். ""இலங்கை தேசத்தார் இயேசு கிறிஸ்துவை அறியவில்லை; அவரை அறிவிக்க  ஊழியர்களும் இல்லை'' என்ற செய்தியை கேள்விப்பட்ட வில்லியம், தான் ஒரு மிஷனரியாக இலங்கை தேசத்திற்கு செல்ல ஆவியானவரால் உணர்த்தப்பட்டார். 

இலங்கை தேசத்திற்குச் செல்வதற்கான முயற்சியை மேற்கொண்டு, மிஷனரி சங்கத்திற்கு கடிதம் எழுதி அனுமதி கேட்டார். திருமணம் முடித்திருந்தால் மட்டுமே செல்ல முடியும் என்று அவர்கள் பதில் கடிதம் அனுப்பினார்கள். தேவன் தனக்கு வாழ்க்கை துணையாக நியமித்திருந்த "சாரா" என்ற பெண்ணை திருமணம் செய்தார். இருவரும் இலங்கை தேசத்தில் ஊழியம் செய்ய அர்ப்பணித்தனர். திருமணம் முடிந்த 5-வது நாள் இலங்கைக்கு பயணம் செய்ய மிஷனரி சங்கத்தாரால் ஏற்ப்பாடு செய்யப்பட்டது.

1813 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மிஷனரிக் குழுவானது இங்கிலாந்திலிருந்து  பாய்மரக்கப்பலில்  புறப்பட்ட  3-ம்  நாளில்  ஏற்பட்ட புயல் காற்றினால் கப்பல் அலைமோதி பலருக்கும் காயம் ஏற்ப்பட்டது. வில்லியம் ஆல்ட்டின் மனைவி சாராவும் அதிக பெலவீனமடைந்தார். மருத்துவ உதவிகள் ஏதும் இல்லாத இச்சூழ்நிலையில் 5 வார கஷ்டத்திற்கு பின்பு சாராவின் உயிர் பிரிந்தது. மனைவி இறந்ததினால் திரும்ப இங்கிலாந்து தேசத்திற்கு செல்ல அவர் ஒருபோதும் நினைக்கவில்லை. 

6 மாத பயணம் முடிவடைந்து இலங்கை தேசத்தில் "மட்டக்கிழக்கு" என்ற  பகுதியில்  தனது  ஊழியத்தை  ஆரம்பித்தார்.  ஆரம்பித்த  2 மாதங்களில் தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டு, ஆலயத்தில் தமிழில் செய்தியும் அளித்தார். 

அந்நாட்களில் மட்டக்கிழக்கு மக்கள் கல்வியறிவு இல்லாமல் நாகரிகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தனர். இங்கிலாந்து தேசத்தில் செல்வச் செழிப்பாக வாழ்ந்து வந்தவர் இங்கு தங்க இடமின்றி தெருத்தெருவாக சென்று ஊழியம் செய்து வந்தார். ஆங்காங்கே கூடி பேசிக்கொண்டிருக்கும் வாலிபர்களை தன்னுடன் அழைத்து வந்து அவர்கள் கல்வி கற்க உதவி செய்தார். 

முதன்முதலாக 5 மாணவர்களை கொண்டு பள்ளிகூடம் ஒன்றை ஆரம்பித்தார். தான் ஊழியம் செய்த 8 மாதங்களில் 8 கிராமங்களில் 8 பள்ளிக்கூடங்களை நிறுவினார். மாணவர்கள் ஆங்கிலம் கற்க வேண்டுமென்று ஒரு கல்லூரியையும் நிறுவினார்.

வில்லியம் ஒரு நாளின் 21 மணி நேரங்களை தேவனோடு உறவாடுவதிலேயும் தேவனுடைய பணியைச் செய்வதிலேயும் செலவழித்தார். உறங்கும் அந்த 3 மணி நேரமும் அவரால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. கொசுக்களும் விஷப் பூச்சிகளும் கடித்ததினால் உடலெல் லாம் வீங்கி அதிக பெலவீனமடைந்தார். 37 வயதான வில்லியம் 1815-ம் ஆண்டு  ஏப்ரல் மாதம் தேவனுடைய ராஜ்ஜியத்தில் சேர்க்கப்பட்டார்.

Comments