John Scadar Missionary Story in Tamil

 ஜான் ஸ்கட்டர் 

 

        டாக்டர் ஜான் ஸ்கட்டர் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள ப்ரீஹோல்ட் என்ற ஊரில் 1793-ம் வருடம் பிறந்தார். 1813-ம் வருடம் மருத்துவப் படிப்பை முடித்து தனது மருத்துவப் பயணத்தை தொடங்கினார். ஹாரியட் என்ற பெண்ணை திருமணம் செய்தார். அந்த நாட்களில் அதிகளவு மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் மருத்துவர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. 

அதுமட்டுமில்லாமல் ஜான் ஸ்கட்டரின் திறமையும் கனிவோடு நோயாளிகளை கவனிக்கும் திறமையும் அநேகரை கவர்ந்ததால் வருடத்திற்கு 2000 டாலர் சம்பாதிக்கும் அளவுக்கு மிகப்பெரிய மருத்துவரானார். 1819-ம் வருடத்தில் ஒருநாள் நோயாளியை சந்திக்க ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்த பொழுது, இந்தியா மற்றும் இலங்கையின் மக்களுக்கு தேவைப்பட்ட மருத்துவப் பணியை குறித்து அறிந்தார். அந்த நேரத்தில் தேவனும் அவரோடு பேசினதால் அழைப்பை ஏற்றுக்கொண்டு பயணம் செய்ய  ஆயத்தமானார். இதற்கு ஜான் ஸ்கட்டரின் தகப்பனார் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். ஆனால் இயேசுவின் கரங்களை பற்றிக்கொண்டு ஜான் ஸ்கட்டர் தம்பதியினர் தமது இரண்டு வயது குழந்தையுடன் இலங்கை நோக்கிப் புறப்பட்டனர். 

ஆறுமாதகால கடல் பயணத்தில் கப்பலில் பணி செய்தவர்களுக்கு நற்செய்தியை அறிவித்தனர். 1819-ம் வருடம் கல்கத்தாவில் வந்து சேர்ந்தனர்.  அங்கே வாழ்ந்த மிஷனரிகளை செராம்பூரில் சந்தித்தனர். பின்னர் அவர் வாழ்வில் வேதனைகள் சூழத்தொடங்கியது. தனது இரண்டு வயது மகள் வயிற்றுப் போக்கினால் அக்டோபர் 25-ம் தேதி மரித்தாள். இருப்பினும் அழிந்து போகின்ற ஆத்துமாக்களை மீட்க கர்த்தர் இப்பணியை தந்திருக்கிறார் என்ற நோக்கத்தோடு டிசம்பர் மாதம் இலங்கை வந்து சேர்ந்தனர்.

ஜான் ஸ்கட்டர் அமெரிக்காவிலிருந்து வெளிதேசத்திற்கு வந்த முதல் மருத்துவ மிஷனரியாவார்.  "மருந்துகள் மூலம் ஒருவரது  உடலைக் காப்பாற்றி பின்னர் ஆத்துமாவைக் காக்க வல்லவரான இரட்சகர் இயேசுவைப் பற்றி அறிவிப்பது" இவர்கள் நோக்கமாக இருந்தது. 

யாழ்ப்பாணத்தில் உற்சாகமாக மக்களுக்கு மருத்துவப் பணியைத் துவங்கிய ஸ்கட்டர் தம்பதியினருக்கு மீண்டும் ஒரு சோதனை காத்திருந்தது. 1820-ம் வருடம் பிப்ரவரி மாதம் ஸ்கட்டர் தம்பதியினருக்கு இரண்டாவது ஒரு ஆண் குழந்தை பிறந்து ஒரு வாரத்ததிற்குள்ளாகவே மரித்துப்போனது. ஆனாலும் ஸ்கட்டர் தம்பதியினர் தங்களுடைய மிஷனரி அழைப்பில் உறுதியாக நின்றனர். 

அதற்கு பின்னர் இத்தம்பதியினருக்கு எட்டு ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தனர். எட்டு ஆண்களில் ஒருவரான சாமுவேல் ஸ்கட்டர் இறையியல் கல்லூரியில் படிக்கும் பொது நீரில் மூழ்கி இறந்துவிட்டார். மற்ற ஏழு மகன்களும், இரண்டு மகள்களும் தங்களது படிப்பை அமெரிக்காவில் முடித்து பின்னர் தென்இந்தியாவில் மருத்துவ மிஷனரிகளாகப் பணியாற்றினர். 

ஜான் ஸ்கட்டர் 1820-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள பண்டத்தரிப்பு என்னுமிடத்தில் மிஷன் ஸ்டேஷன், மருத்துவமனை மற்றும் பள்ளிகளை நிறுவினார். 19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் காலரா, மலேரியா, பிளேக், மஞ்சள் காமாலை போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் அதிகமாய் பரவின. அந்த நோய்களிலிருந்து அநேகரைக் காப்பாற்றி இரட்சகரை அறிவித்தனர். 

மருத்துவமனையும் பள்ளியும் மட்டுமன்றி திருச்சபைகளையும் நிறுவினர். தொடர்ந்து 19 வருடங்கள் யாழ்ப்பாணத்தில் மருத்துவ மிஷனரியாகப் பணியாற்றி இயேசுவின் நற்செய்தியை அநேக மக்களுக்கு அறிவித்தனர்.

1821-ம் ஆண்டு ஜான் ஸ்கட்டர் தமிழ் மொழியை நன்கு கற்று அநேகருக்கு தமிழில் நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினார். அந்நாட்களில் அச்சு இயந்திரம் அதிகளவு இல்லாத காரணத்தினால் இயேசுவின் அன்பை பனை ஓலையில் எழுதி அநேக பகுதிகளுக்குச் சென்று கொடுத்து வந்தார். அவரது மருத்துவம் மற்றும் ஊழியத்தின் மத்தியில் 23 பள்ளிகளை நிறுவினார். 

தமிழ்நாட்டின் பல இடங்களில் துண்டுப் பிரதிகளைக் கொடுத்து 11 மணி நேரம் பிரசங்கம் செய்தார். 1842-ம் வருடம் உடல் சுகவீனம் காரணமாக அமெரிக்கா சென்று குணமடைந்த பின்பு 1846-ம் ஆண்டு மீண்டும் இந்தியா வந்து மதுரையில் தங்கி இரண்டு வருடம் மருத்துவப் பணியோடு சுவிசேஷப் பணியும் செய்தார். 1855-ம் வருடம் ஜனவரி 13ம் தேதி இரவு நித்திரையின் போது மரித்தார். 

இவரது மரபு வழியில் வந்த அடுத்த நான்கு தலைமுறையில் 42 மிஷனரிகள் எழும்பி மருத்துவ ஊழியத்துடன் இயேசுவின் அன்பைக் கூறினர். அதில் ஒருவர் தான் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ்-யை நிறுவிய டாக்டர் ஐடா ஸ்கட்டர்.

இதைப்போன்ற சாட்சியுள்ள மிஷனரித் தலைமுறைகள் தேசமெங்கும் எழும்பி தேவனுக்கான செயல்பட ஜெபிப்போம்.

Comments