Thomas Ragland Missionary Story in Tamil

 தாமஸ் ராக்லண்ட் 



        தாமஸ் ராக்லண்ட் என்ற மிஷனரி இங்கிலாந்து தேசத்தில் பாரம்பரியமிக்க பிரபுக்கள் குடும்பத்தில் 1815-ம் ஆண்டு லிவர்பூல் என்ற இடத்தில் பிறந்தார். 

தனது சிறுவயதில் பெற்றோரை இழந்ததினால் மாமாவின் கண்காணிப்பில் வளர்க்கப்பட்டார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று கணித ஆசிரியராக அதே கல்லூரியில் பணிபுரிந்தார். பின்பு வேதாகமக் கல்லூரியில் பயின்று சிலகாலம் இங்கிலாந்தில் குருவானவராக பணி செய்தார். 

இந்த சூழ்ந்லையில் "சர்ச் மிஷன் சொசைட்டி' (Church Mission Society) என்ற ஸ்தாபனத்தின் மூலம் 1845 ல் சென்னைக்கு வந்து தமிழ் பயின்று திருநெல்வேலிக்கு மிஷனரியாக வந்தார். தாமஸ் ராக்லண்ட் சிவகாசி பகுதியில் ஓலை குடிசையிலிருந்து தனது ஊழியத்தை ஆரம்பித்தார். 

அதிகாலையில் பனைமரம் ஏறும் மக்களுக்கு நற்செய்தி கூறிவந்தார். அவர்கள் ஏறி இறங்கும் வரை காத்திருந்து பின்பு அடுத்த பனைமரம் ஏறும் அந்த இடைவெளியில் கிறிஸ்துவின் அன்பை ஒவ்வொருவருக்கும் கூறி வந்தார்.  

ஒருநாள் ஜமீன்தாரின் விளைநிலத்தில் ஏர்மாடு மூலம் நிலத்தை உழுவதற்காக ஏரின் ஒருமுனையில் காளைமாட்டையும் மறுமுனையில் ஒரு பெண்ணையும் கட்டி வேலைவாங்கினதைக் கண்டு மனம் உடைந்து இவர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.

இதனால் சுவிசேஷத்திற்கு விரோதமாக கடும் எதிர்ப்பு ஏற்ப்பட்டு ராக்லண்ட் மீது கற்கள் வீசப்பட்டன. இருப்பினும் சோர்ந்து போகாமல் ஊழியத்தைச் செய்து வந்தார். ஒருமுறை ஊழியத்திற்கு சென்றிருந்த போது மிகுந்த களைப்பினால் பசியுண்டாயிற்று. அருகிலிருந்த வீட்டிலே உணவு கேட்டார். அவர்கள் தனது பாத்திரத்தில் கொடுத்தால் பாத்திரம் தீட்டுப்படும் என கூறிவிட்டனர். அதனால் தான் அணிந்திருந்த தொப்பியில் அவர்கள் கொடுத்த கூழைப் பெற்றுக்கொண்டு தனது நற்செய்திப் பணியை தொடர்ந்தார். 

ராக்லண்ட் 750 கிராமங்களுக்கு நடந்தே சென்று தேவனுடைய அன்பைக் கூறினார். 1854-ம் ஆண்டு விசுவாசிகளுக்கென ஒரு ஆலயம் கட்டப்பட்டது. இதனை எதிர்த்தவர்கள் விசுவாசிகளை மிகவும் கொடுமைப்படுத்தினர். கோவிலில் தேர்  இழுக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்கள் உடைமைகள் எரிக்கப்பட்டதுமல்லாமல் தண்ணீர் எடுக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் ஒருவரும் பின்வாங்காமல் கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டனர். இதைக் கண்ட ராக்லண்ட் ஒரு கிராமத்தை விலைக்கு வாங்கி அதற்கு "சாட்சியாபுரம்' என பெயறிட்டு கிறிஸ்தவர்களை குடியமர்த்தினார். 

ராக்லண்டின் நற்செய்திப் பணியினால் அச்சம்பட்டி, வாகைக்குளம், பொட்டல்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, பனையடிப்பட்டி, சாத்தூர், நல்லூர், பனவடலி, பன்னீர்குளம் பகுதிகளில் அநேகர் இயேசுவைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். 

இவர் காசநோயால் 1857-ம் வருடம் பாதிக்கப்பட்டார். கிராம மக்கள் இவரை தனது சொந்த தேசமான இங்கிலாந்து தேசத்திற்கு சென்று சிகிட்சை எடுக்கக் கூறினர். இருப்பினும். "கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்' என்ற வசனத்தின்படி தியாகத்தோடு இந்திய தேசத்திலேயே இருந்து விட்டார்.

1858-ம் ஆண்டு தனது 43-ம் வயதில் தேவனுடைய ராஜ்யத்தில் சேக்கப்பட்டார். இவ்வண்ணமாக பிரபுக்கள் குடும்ப கல்லறையில் அடக்கம் செய்யப்படவேண்டியவர் நம் தமிழ் நாட்டில் விதைக்கப்பட்டார்.

˜

Comments