John Geddie Missionary Story in Tamil

 ஜாண் கெடி 



        1815 ம் ஆண்டு ஜாண் கெடி ஸ்காட்லாண்டில் பிறந்தார். பிறந்த சில நாட்களில் மரிக்கும் நிலைக்குப் போய்விட்டார். அவரின் பெற்றோர் மிகவும் பாரப்பட்டு ஜாண் கெடி குணமாக்கப்பட்டால் ஊழியத்திற்காக ஒப்புக்கொடுப்போம் என்று ஜெபித்தனர். ஜெபத்தைக் கேட்டு அவருக்கு நல்ல சுகத்தை கர்த்தர் தந்தார். 

சிறு வயதிலிருந்தே சிறந்த மாணவராக காணப்பட்டார். தனது 19-ம் வயதில் இயேசுவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, 1838-ம் ஆண்டு வேதாகமக் கல்வியை முடித்தார். அதன் பின்பு சார்லட்டே என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். 

1846-ம் ஆண்டு நியூ ஹெப்ரைட்ஸ் என்னும் இடத்திலுள்ள மெலேனேசியம் மற்றும் பாலினேசியம் தீவுகளிலுள்ள நரமாமிசம் சாப்பிடும் மக்களின் நடுவே தனது ஊழியத்தைத் தொடங்கினார். பின்பு 1848-ம் ஆண்டு அனிதீயம் என்னும் தீவிற்கு சென்று எழுத்துவடிவம் இல்லாத அந்தத் தீவின் மொழியைப் படித்து எழுத்துவடிவம் கொடுத்து சில புத்தகங்களை எழுதினார். 

அம்மக்கள் மிகவும் வித்தியாசமான ஆடைகளை அணிந்தும் முகத்தில் வர்ணமிட்டுக் கொண்டும் பெண்களை அடிமைகளாக நடத்தியும் வந்தனர். ஒரு வீட்டில் ஆண் இறந்தால் அப்பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொன்று இருவரையும் புதைப்பர். அந்த மக்கள் மனித உடலை மிகவும் சுவையான உணவாகக் கருதினார்கள். 

இப்படிப்பட்ட மக்களின் மத்தியில் ஜாண் கெடி ஒரு பள்ளியை ஆரம்பித்து, தனது பணத்தைப் பிள்ளைகளுக்கு கொடுத்து பள்ளிக்கு வரச் செய்து  ஊழியத்தை தொடங்கினார். சுவிஷேச ஊழியத்திற்கு செல்லும் போது அவரைக் கொல்ல பலர் முயற்சி செய்தனர். பல கஷ்டங்களின் மத்தியிலும் ஆண்டவருடைய அன்பை அப்பகுதியிலுள்ள ஜனங்களுக்குக் கூறி வந்தார். கெடியின் ஜெபத்தினிமித்தம் பெரிய மாற்றம் அப்பகுதியில் ஏற்ப்பட்டது. 

ஒரு நாளில் யாகானு என்ற மனிதன் அவரை பார்க்க வந்தார். அவர்  மனித  மாமிசத்தைச்  சாப்பிடும்  கும்பலுக்கு  தலைவராக இருந்தார். யாகானு வாழ்ந்த தீவில் சில குழந்தைகள் மட்டுமே இருந்தனர். ஏனென்றால் அவர்கள் அனைத்து குழந்தைகளையும் கொன்று சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட கொடூரமான மனிதன் தேவனின் அன்பை அறிந்து கொண்டு ஜெபிக்க வந்தார். இப்படியாக அநேகர் இரட்சிப்புக்குள்ளாக வழிநடத்தப்பட்டனர்.

ஜாண் கெடி 24 ஆண்டுகள் ஊழியம் செய்து 25 சபைகளை அப்பகுதியில் உருவாக்கினார். 1872-ம் ஆண்டு அவர் தேவனுடைய ராஜ்யத்தில் சேர்க்கப்பட்டார். அவருடைய கல்லறையில் ""1848-ம் ஆண்டு அனித்தீயம் தீவிற்கு வரும்போது ஒரு ஆத்துமாவும் இரட்சிக்கப்படவில்லை; ஆனால் அவர் அங்கிருந்து செல்லும்போது ஒரு ஆத்துமாவும் இரட்சிக்கப்படாமல் இல்லை"" என்று பொறிக்கப்பட்டுள்ளது.

இப்படியாக மிஷனரிகள் மூலமாக பல ஜாதித் தலைவர்கள் மற்றும் பல ஆதிவாசி சமூகத் தலைவர்கள் இயேசுவை கண்டுக்கொள்ள ஜெபிப்போம்.

Comments