Wellesley Bailey Missionary Story in Tamil

 வெல்லஸ்லி பெய்லி



        வெல்லஸ்லி பெய்லி 1846-ம் ஆண்டு அயர்லண்டில் பிறந்தார். சிறு பிள்ளையிலிருந்தே சபைக்கு சென்று கொண்டிருந்த பெய்லி தனது 20 வயதில் சபைக்குச் செல்லும் பழக்கத்தை விட்டு உலகபிராகாரமாக வாழ்ந்து கொண்டிருந்தார். அந்நாட்களில் அயர்லாண்டு தேசத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக அநேகர் வெளிதேசத்திற்குச் சென்றனர். 

கிறிஸ்துவின் அழைப்பை மறந்து பெய்லியும்  நன்கு சம்பாதித்து வாழ முடிவு செய்து ஆஸ்திரேலியா சென்றார். அங்கு பெய்லி கடுமையாக உழைத்தும் லாபம் கிடைக்காமல் தனது தேசத்திற்கு திரும்பினார். ஊழியம் செய்வதற்கு தேவன் தன்னை முன்குறித்திருப்பதை தெளிவாக உணர்ந்த பெய்லி இந்தியாவில் காவல் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த தனது சகோதரனிடத்திற்குச் செல்ல முடிவு செய்தார். 1869-ம் ஆண்டு இந்தியா வந்தார். 

தன் சகோதரன் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதை அறிந்த பெய்லி தனியாக தனது ஊழியப் பயணத்தை தொடர்ந்தார். பின்னர் அமெரிக்கன் பிரஸ்பிடேரியன் மிஷன் இவரை பஞ்சாப் மாநிலத்தின் அம்பலா என்ற இடத்தில் ஆசிரியராகப் பணியமர்த்தியது. அந்நாட்களில் தொழுநோய் அதிகமாகக் காணப்பட்டது. 

தொழுநோயாளிகளை ஊருக்குப் புறம்பே தள்ளி வைத்திருந்தனர். மிஷனின் தலைவரான டாக்டர் மோரிஸன் தொழுநோயாளிகளுக்காகச் சிறு குடிசை அமைத்து அவர்களைப் பராமரித்து வந்தார்.  ஒருநாள் பெய்லியை இக்குடிசைக்கு அழைத்து சென்றார். அதுவரையில் தொழுநோய் பற்றி வேதத்தில் மட்டுமே வாசித்திருந்த பெய்லி சூம்பின கையுடையவர்களையும் குருடர்களையும் முகம் முழுவதும் புண்கள் நிறைந்திருந்த  மக்களையும் கண்டு வேதனை அடைந்தார். 

1871-ம் ஆண்டு பெய்லி அலீஸ் கிரகாம் என்பவரை திருமணம் செய்து இருவருமாக ஊரிலிருந்து ஒதுக்கப்பட்ட தொழுநோயாளிகளின் மத்தியில் ஊழியம் செய்து வந்தன. 1873-ம் ஆண்டு அலீஸ் கிரகாமின் உடல்நிலை மோசமாக, இருவரும் அமெரிக்க மிஷன் ஸ்தாபனத்திலிருந்து விலகி சொந்த தேசத்திற்குப் பயணம் செய்தனர். இருப்பினும் பெய்லியின் நினைவுகள் விட்டுவந்த ஊழியத்திலேயே இருந்தது. அங்கிருந்தும் தங்களது தோழர்கள் மற்றும் உறவினர்களுக்கு தொழுநோயாளிகளின் நிலைகளை கூறி அவர்களுக்கு உதவுமாறு பல முயற்சிகளை மேற்க்கொண்டனர். 

அலீஸின் தோழிகள் இருவர் (Pim Sisters) வருடம் 30 ஈரோ கொடுத்து தாங்க முன்வந்தனர்.  1875-ல் மீண்டும் இருவரும் இந்தியா வந்து "தி லெப்ரொஸி மிஷன்' (The Leprosy Mission) என்ற அமைப்பை நிறுவி ஊழியத்தைத் தொடங்கினர். தொழுநோயாளிகளின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு உதவி செய்து கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தினர். 30 ஈரோ கொடுத்துத் தாங்கியவர்கள் பின்னாட்களில் 900 ஈரோ கொடுக்க ஊழியம் வளர்ந்தது. 

இந்தியா மட்டுமல்லாமல் பர்மா, சீனா, ஜப்பான், தென்அமெரிக்கா, தென்ஆப்ரிக்கா, சுமத்ரா தீவுகள், கொரியா ஆகிய நாடுகளில் இவர்களின் பணி விரிவடைந்து இன்றும் பல நாடுகளில் இவ்வமைப்பு செயல்பட்டுவருகிறது. 

1937-ம் வருடம் தனது 91-ம் வயதில் பெய்லி தேவனுடைய ராஜ்யத்தில் சேர்க்கப்பட்டார்.

Comments