ஜேம்ஸ் சால்மர்ஸ்
ஜேம்ஸ் சால்மர்ஸ் ஸ்காட்லாந்து தேசத்தில் 1841 ம் ஆண்டு கல்சிற்ப ஆசாரியின் மகனாகப் பிறந்தார். 18 வயதில் தனது ஊரில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் இயேசுவின் அன்பை அறிந்து இரட்சிக்கப்பட்டு, தமது வாழ்க்கையை மிஷனரியாக அற்பணித்தார். பட்டப் படிப்புகளை முடித்தவுடன் தனது 26-ம் வயதில் லண்டன் மிஷனரி சங்கத்தில் இணைந்தார்.
அதன்பின் 1867-ம் ஆண்டு "ரரோடோங்கா' என்ற தீவிற்கு மிஷனரியாக வந்திறங்கினார். அங்குள்ள பழங்குடி மக்களின் மொழியை வெகு விரைவில் கற்று, அந்த மொழியிலே கிறிஸ்துவின் அன்பை அவர்களுக்கு அறிவித்தார். அந்தத் தீவில் 10 வருடம் மிஷனரி பணி செய்து இருளின் ஆதிக்கத்தில் இருந்த மக்களை மெய்யான ஒளியாகிய இயேசுவினிடத்தில் சேர்த்தார்.
ஜேம்ஸ் சால்மர்ஸ் 1877-ம் ஆண்டு தமது 36-ம் வயதில் ஆஸ்திரேலியாவுக்கு வடபகுதியில் அமைந்திருக்கும் தீவு நாடான "நியு கினியா' விற்கு தனது மனைவியோடு சென்றார். அந்த தீவுகளில் வசித்த மக்கள் மனித மாம்சம் உண்பவர்களாக இருந்தனர்.
ஆபத்து மிகுந்த அத்தீவின் மக்களுக்கு சுவிசேஷம் சொல்லப் போகையில் தமது கையில் எந்தவிதமான ஆயுதங்களையும் எடுத்துச் செல்ல மாட்டார். ஏனென்றால் கையில் ஆயுதங்களோடு சென்றால் வெள்ளை மனிதன் நம்மைத் தாக்க வந்திருக்கிறான் என்று சொல்லி ஓடுவார்கள். இல்லையென்றால் தாக்கத் தொடங்குவார்கள். ஆபத்து நிறைந்த பழங்குடி மக்களின் மேல் கரிசனை கொண்டவராய் கிறிஸ்துவின் அன்பை அநேகருக்கு அறிவித்துக் கொண்டிருந்தார்.
ஒருநாள் "கோரிபாரி' என்ற தீவிற்கு படகில் சென்றிருந்த ஜேம்ஸ் சால்மர்ஸை அத்தீவின் பழங்குடி மக்கள் தன்னைச் சூழ்ந்துக் கொள்ளவே, படகை விட்டு அவர் இறங்காமல் நாளை வருவதாக கூறி தனது பகுதிக்கு வந்தார்.
அடுத்த நாள் ஈஸ்டர் ஞாயிறு ஆராதனைகளை முடித்து விட்டு, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நற்செய்தியை அறிவிக்க ஆபத்து நிறைந்த "கோரிபாரி' தீவிற்கு மீண்டும் சென்றார். ஒலிவர் டோம்கின்ஸ் என்ற மிஷனரியும் உடன் சென்றார். இவர்களது வருகையால் மிகவும் மகிழ்ந்த அத்தீவின் பழங்குடி மக்கள் இருவரையும் உற்சாக வரவேற்புடன் புதிதாய் அமைக்கப்பட்ட "தூபு' என்று அழைக்கப்படும் கேளிக்கைக் குடிசைக்கு அழைத்துச் சென்றனர். அந்த இடத்தில் மனிதர்களை சாகும் வரை சண்டையிட வைத்து பின்னர் அவர்களை பலியாக்கி உணவாக உண்பார்கள். இதை அறிந்திராத ஜேம்ஸ் சால்மர்சசும், ஒலிவர் டோம்கின்சும் கிறிஸ்துவின் அன்பை அவர்களுக்கு அறிவித்தவண்ணமாய் அந்தக் குடிசைக்கு சென்றனர்.
மரத்தினாலான விக்கிரகங்களைச் சுற்றிலும் அநேக மனித மண்டை ஓடுகள் குவிக்கப்பட்டிருந்தது. இருவரும் அதை பார்த்துக் கொண்டிருந்த வேளையிலே, எந்தவித எச்சரிப்பும் இன்றி அந்த பழங்குடி மக்கள் அவர்களைத் தாக்கத் தொடங்கினர்.
சில நிமிடங்களில் அவர்களது உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, அருகில் கொதித்து கொண்டிருந்த குழம்பில் போடப்பட்டது. ஜேம்ஸ் சால்மர்சும், ஒலிவர் டோம்கின்சும், இயேசு உயிர்த்தெழுந்த அந்த ஈஸ்டர் நாளில், இயேசுவை அறிவித்துக்கொண்டே அந்த பழங்குடி மக்களுக்கு உணவாக மாறினர்.
தற்போது அப்படிப்பட்ட தீவுகளில் வாழ்கின்ற மக்கள், நம்மைப்போல மிகுந்த நாகரீகத்துடன் வாழ்கின்றார்கள். ஒரு காலத்தில் யார் அந்தத் தீவிற்கு சென்றாலும் நரபலியாக்கிவிடுவார்கள். ஆனால் இன்றைக்கோ அந்தத் தீவுகள் எல்லாம் அநேகர் செல்லக்கூடிய சுற்றுலாத் தளங்களாக மாறிவிட்டது. இந்த மாற்றத்திற்கு காரணம் ஜேம்ஸ் சால்மர்ஸை தொடர்ந்து அநேக மிஷனரிகள் "நியு கினியா' தீவை நோக்கி சென்று இயேசுவின் அன்பை அறிவித்ததாகும்.
அநேக மக்கள் கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். அதன் விளைவு, 7 கோடிக்கும் அதிமான மக்கள் வாழும் அந்தத் தீவில், இன்றைக்கு 96 சதவீதம் மக்கள் கிறிஸ்தவர்களாக மாறியுள்ளனர். ஒரு காலத்தில் மனித மாம்சம் சாப்பிட்டவர்கள் இன்றைக்கு ஆவியோடும் உண்மையோடும் இயேசுவை ஆராதித்து வருகின்றார்கள். இது போன்ற நிகழ்ச்சிகள் இன்றைக்கும் நாம் வாழும் உலகத்தில் சில தீவுகளில் நடக்கின்றன.
இதனையெல்லாம் மனதில் வைத்து தொடர்ந்து தேசங்களுக்காக ஜெபிப்போம்.
Comments
Post a Comment